“யாரும் பசியுடன் இருக்கக்கூடாது” – ஊரடங்கு காலத்திலும் விலையை ஏற்றாமல் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் இட்லி பாட்டி!
IdlyPatti | #OneRupeeIdly | #இட்லிபாட்டி
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துவிட்ட இந்த காலத்திலும் கூட விலையை ஏற்றாமல் ஒரு ரூபாய்க்கே இட்லி விற்பனை செய்யும் மூதாட்டியை பலர் பாராட்டிவருகின்றனர்.
ஊரடங்கு நேரத்தில் அனைத்து பொருட்களின் விலை உயர்ந்துவிட்ட நிலையிலும் கூட ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார் இட்லி பாட்டி..!
கோவை மாவட்டம் வலிவேலாம்பாளையத்தில் வசித்துவருபவர் கமலாம்பாள். 85 வயதாகும் இவர் அவரது வீட்டிற்கு அருகிலேயே இட்லி விற்பனை செய்துவருகிறார். விறகு அடுப்பை வைத்து சுவையான இட்லி சுடும் இவரது கடையில், இட்லியின் விலை ஒரு ரூபாய் மட்டுமே. சமீபத்தில் கமலாம்பாள் பாட்டி சமூகவலைதளங்களில் மிகவும் வைரலானார். அதனைத் தொடர்ந்து அவரிடம் பல யூடியூப் சேனல்கள், செய்திச்சேனல்கள் பேட்டி எடுத்தன. அவரை ஒரு ரூபாய் இட்லி பாட்டி என அனைவரும் அழைக்கத்தொடங்கினர்..!

இந்நிலையில், தற்போது கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளபோதிலும் விலையை ஏற்றாமல் ஒரு ரூபாய்க்கே இட்லி விற்பனை செய்துவருகிறார் கமலாம்பாள் பாட்டி. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இவரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். மேலும், அவருக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அப்பகுதி திமுகவினரிடம் வலியுறுத்தினார்..!
அரிசி, பருப்பு என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்ட நிலையில், இன்றைக்கும் கூட ஒரு ரூபாய்க்கே இட்லி விற்பனை செய்வது குறித்து மூதாட்டியிடம் கேட்டபோது, “என்னிடம் வருபவர்கள் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது. ஒரு நாளைக்கு 300 இட்லி விற்கிறேன். இட்லிக்கு தேவையான அனைத்து பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. சட்னி அரைக்க தேவையான பொருட்களும் விலை உயர்ந்துவிட்டது. ஆனால், நான் அதே விலையில் இட்லி விற்பனை செய்துவருகிறேன். என்னை நம்பி வருபவர்களுக்கு இட்லி இல்லை என்று கூறினால் அவர்கள் எங்கே செல்வார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். ஒரு ரூபாய் இட்லி பாட்டியின் சேவைக்கு பலர் பாராட்டிவருகின்றனர்.!
