மதநல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு – அபுதாபியில் நோன்பு வைக்கும் இந்துப்பெண்

அபுதாபி: இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் மதநல்லிக்கணத்திற்கு உதாரணமாக இந்துப்பெண் ஒருவர் கடந்த 4 நாட்களாக நோன்பு வைத்து வருகிறார்.
அபுதாபியில் வசித்துவரும் இந்தியாவை சேர்ந்த சேர்ந்த ஸ்ரீதேவி சிவானந்தம் என்ற அந்த பெண் மதமாச்சரியங்களை கடந்து நோன்பு வைத்து வருவது அரேபியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு அவர்களை நெகிழவும் செய்துள்ளது. அதிகாலை 4 மணிக்கு சஹர் உணவு சாப்பிடும் அவர் மாலை 6.30 வரை எச்சில் கூட விழுங்காமல் நோன்பை கடைபிடித்து வருகிறார்.
இதனிடையே நோன்பு வைத்து வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீதேவி சிவானந்தம், இறைவன் மதங்களை கடந்தவன் என்றும் மனிதகுலம் முழுவதையும் படைத்தது ஒரே இறைவன் தான் எனவும் தெரிவிக்கிறார். ரமலான் மாதத்தில் பல வருடங்களாக தான் நோன்பு வைத்து வருவதாகவும், தனது வேண்டுதல்கள் சிலவற்றை மனதில் வைத்து அது நிறைவேற வேண்டி நோன்பை கடைபிடிப்பதாக கூறுகிறார் ஸ்ரீதேவி சிவானந்தம்.
இந்த ரமலான் மாதத்தில் தனது வேண்டுதல்களை இறைவன் நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும், பசித்திருந்து, விழித்திருந்து நோன்பை கடைபிடிக்கும் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் தனது வாழ்த்தை பகிர்ந்துகொள்வதாகவும் கூறியுள்ளார் ஸ்ரீதேவி சிவானந்தம்.
தமிழகத்தை சேர்ந்த இவர் தனது குடும்பத்தினருடன் பல வருடங்களாக அபுதாயில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.