இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து அனுப்பிய இந்தியா அரசு

கொழும்பு : இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை, 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில், 38 பேர் குணமடைந்துள்ளனர்..! கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், 263 பேர் மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்..!


‘இலங்கையில் உள்ள சுகாதாரக் கட்டமைப்பின் படி, 2,000 கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். அதனால், வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு நீடிக்கப்படுகிறது. ஊரடங்கைப் பின்பற்றி, அனைத்து மக்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகாமல் தற்காத்து கொள்ளவும்’ என, இலங்கை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வெறும் 2,000 பேருக்கு மட்டுமே சிகிச்சையளிப்பதற்கான கட்டமைப்பு உள்ளதாக அரசு அறிவித்திருப்பது, இலங்கை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது…!
இந்நிலையில், அண்டை நாடான இந்தியாவிடம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகள் கொடுத்து உதவுமாறு, இலங்கை அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று, அந்நாட்டிற்கு, 10 டன் மருந்துகளை இந்தியா இலவசமாக அனுப்பி வைத்துள்ளது.இந்தியாவிற்கு சொந்தமான சிறப்பு விமானம் இந்த மருந்துகளை, நேற்று மாலை இலங்கையின், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு சேர்த்தது.


இந்த நெருக்கடி மிகுந்த சூழலில், இலங்கை மக்களைக் காப்பதற்காக, மருந்துகளை இலவசமாகக் கொடுத்து உதவிய, இந்திய பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.இலங்கை மக்களுக்கு உதவி தரும் பிரதமர் மோடியையும் இந்திய மக்களையும், நாட்டு மக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்..!

Advertisement

Show More
Back to top button