இந்தியாசர்வதேச செய்திகள்

ட்ரம்பின் மிரட்டல் எதிரொலி: ஹைட்ராக்சிகுளோரோகுயின்ஏற்றுமதி தடையைத் தளர்த்தும் பிரதமர் மோடியின் முடிவு வெட்ககரமான செயலாகும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கருத்து

ட்ரம்பின் மிரட்டல் எதிரொலி:

ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ ஏற்றுமதி தடையைத் தளர்த்தும் பிரதமர் மோடியின் முடிவு வெட்ககரமான செயலாகும்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கருத்து


இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத்தலைவர் எம்.கே.பைஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மலேரியா காய்ச்சலைக் குணப்படுத்துவதற்கு பயன்படுத்தி வந்த ‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ அத்தியாவசிய மருந்தை, பரவிவரும் கோவிட்-19 நோய் தடுப்புக்காகவும், நாட்டு மக்களின் நலன்கருதியும் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் மிரட்டலுக்கு பணிந்து தடையைத் தளர்த்திய பிரதமர் மோடியின் முடிவால் தேசத்தின் 130 கோடி மக்கள் வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகள் இத்தகைய மருந்துகளின் மீதான இந்தியாவின் தடையை நீக்குமாறு கடந்த மார்ச் மாதத்திலேயே கோரிக்கைகள் விடுத்தபோதிலும், மனிதாபிமான அடிப்படையிலும் இந்திய அரசு கோரிக்கைகளை ஏற்காதது மட்டுமில்லாமல், அத்தகைய மருந்துகளின் ஏற்றுமதிகளைக் கடுமையாக்கியதோடு அந்தப் பட்டியலில் ‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ மருந்தையும் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ மருந்தை அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யத் தவறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்கநேரும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஒரே ஒரு மிரட்டல் அறிக்கைக்குப் பணிந்து, இந்திய அரசு கட்டுப்பாட்டைத் தளர்த்தியிருப்பது வியப்பை அளிக்கிறது.

இந்த நாகரீக உலகில் ஒரு நாட்டின் அதிபர் பிறிதொரு நாட்டின் பிரதமருக்கு விடுத்த வெளிப்படையான மிரட்டல் என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று என்று கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கோவிட்19 என்ற கொடிய கொள்ளை நோய் நாடு முழுவதும் வேகமாகப் பரவி நாட்டு மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பேரபாயத்தை புறந்தள்ளி, அமெரிக்க நண்பரை மகிழ்விக்கவேண்டி தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் தேசத்திற்கு அபாயமாக முடியும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

சற்றே சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபரின் இந்திய வருகையொட்டி இந்தியாவின் பொருளாதார நிலை வரலாறு காணாத படுபாதாளத்தில் இருந்தபோதும், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வாரியிறைத்து அவரை மகிழ்வித்த போதிலும், அவர் நாட்டின் பிரச்சனை என்று வந்துவிட்டபோது, சமீபத்தில் கொண்டாடிய நேசத்தை ஒரு பொருட்டாக நினைக்காமல் அவர் இந்தியாவிற்கு மிரட்டல் விடுக்கும் தொனி வருத்தத்திற்குரியது.

மனிதாபிமான முடிவுகள் வரவேற்கப்பட வேண்டியதே என்றாலும், நாட்டு மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் புறக்கணித்து, நாட்டின் இறையாண்மை மற்றும் கண்ணியத்தை சரணடையச் செய்வது மிகத்தவறான நடைமுறையாகும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button