இந்தியா

எச்சரிக்கை…! உங்கள் கிரெடிட், டெபிட் கார்டுகள் மார்ச் 16 முதல் பயன்படுத்த முடியாமல் போகலாம்…!

புதிதாக வழங்கப்பட்ட சிப் வைத்த டெபிட், கிரெடிட் கார்டுகளை ஆன்லைன் பரிவர்த்தனைக்காக பயன்படுத்தவில்லை என்றால், மார்ச் 16-ம் தேதி முதல் நிரந்தரமாக அந்த கார்டுகளை ஆன்லைன் பரிவர்த்தனைக்காக பயன்படுத்த முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டில் சமீப காலமாக டெபிட்- கிரெடிட் கார்டுகள் மூலலமாக ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. இதை தடுக்கும் நோக்கில், அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ‘சிப்’ பொருத்தப்பட்ட புதிய டெபிட் – கிரெடிட் கார்டுகளை வழங்கும்படி, சில ஆண்டுகளுக்கு முன்னர் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

பெரும்பாலான கிரெடிட் கார்டுகளின், பின்புறத்தில் மேக்னடிக் ஸ்டிரைப் எனும், காந்தக்கோடுகள் உள்ளன. அதை மாற்றிவிட்டு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சிறிய மின்னணு சிப் பொருத்திய கார்டுகளை வழங்கும்படி ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு கெடு விதித்திருந்தது.

தற்போது, அனைத்து வங்கிகளும் சிப் பொறுத்தப்பட்ட புதிய கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளன. எனினும், பழைய கார்டுகளை பயன்படுத்த முடியாத வகையில் செல்லாதக்கதாக்கப்பட்டன.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் ரிசர்வ் வங்கி புதிய அறிவிக்கையை வங்கிகளுக்கும், பொதுமக்களுக்கும் வெளியிட்டது. அதன்படி, புதிதாக வழங்கப்பட்ட டெபிட் – கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனைக்காக பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் சர்வதேச பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மார்ச் 16-ம் தேதி முதல் ஆன்லைன் பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படாத புதிய கார்டுகள் மூலம் சர்வதேச பரிவர்த்தனையோ, ஆன்லைன் பரிவர்த்தனையோ செய்ய முடியாது.

எனினும், ATM, கடைகளில் ஸ்வைப் செய்யும் POS கருவிகள் மூலம் அந்த கார்டுகளை பயன்படுத்துவதில் சிக்கல் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்டுகளின் நிலைகளில் ஏதேனும் மாற்றம் இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு SMS அல்லது மின்னஞ்சல் அனுப்புமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது.

இணைய மோசடி அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால், ஆன்லைன் பரிவர்த்தனை செய்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு டெபிட், கிரெடிட் கார்டுதாரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button