டிரம்ப் வருகை – அகமதாபாத் சேரி மக்களை உடனே காலிசெய்யும்படி உத்தரவிட்ட பாஜக அரசு
அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்குமுன் அகமதாபாத் சேரி பகுதியில் தங்கியிருந்த 45 குடும்பத்தினரை உடனே வெளியேறும்படி அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலினாவுடன் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தருகிறார். வரும் 24, 25 ஆம் தேதிகளில் இந்தியாவில் முகாமிடும் டிரம்ப் தம்பதிகள், குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வருகை தருகின்றனர்.
அங்கு டிரம்ப் நமஸ்தே என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மாநில மற்றும் மத்தியஅரசுகள் ஏற்பாடு செய்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியானது, டிரம்ப் காரில் செல்லும் வழியான, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கி, மொத்தேரா மைதானம் வரை நடைபெறுகிறது.
இதையொட்டி, ஏற்கனவே அங்கிருக்கும் சேரி குடியிருப்புகள் டிரம்ப் கண்களுக்கு தெரியாத வகையில் உயரமான சுவர் எழுப்பி மறைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது, சரணியாவாஸ் அல்லது தேவ் சரண் சேரி என்று அழைக்கப்படும் பகுதியில் வாழும் மக்களை உடனே வெளியேறக் கூறி அகமதாபாத் மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த பகுதிகளில் வசித்து வரும் 45 குடும்பங்களுக்கு அதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. அரசு இடமான அதில் குடியிருந்து வருபவர்கள் பெரும்பாலோர் கட்டிடத்தொழிலாளிகள் என்பதும், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
அவர்கள் உடனே அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், அவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
இதுகுறித்துகூறிய அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேசன், அந்த 45 குடும்பத்தினரும் தங்கியிருக்கும் பகுதி அகமதாபாத் கார்ப்பரேசனுக்கு உரியது என்றும், அதனை இப்பகுதி மக்கள் ஆக்கரமிப்பு செய்து தங்கியிருக்கின்றனர்.
எனவே இந்த பகுதியில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏதேனும் மேல் முறையீடு செய்ய விரும்பினால் புதன் கிழமை கார்ப்பரேசன் அலுவலகத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.,
இந்த வெளியேற்ற நடவடிக்கைகளுக்கும் அமெரிக்க அதிபர் வருகைக்கும் சம்பந்தமே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.