தமிழ்நாடு

#ONGS திருவாரூர் அருகே எண்ணெய்குழாய் வெடிப்பு விளைநிலம் நாசம்

மன்னார்குடி: திருவாரூர் அருகே எண்ணெய் குழாய் வெடித்து வயலில் பரவியதால் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து பயிர் சேதமானது.திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி சார்பில் 100 இடங்களில் கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதற்காக விளைநிலங்களில் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு, சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கச்சாஎண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.

கூத்தாநல்லூர் அருகே பாரதி மூலங்குடி கிராமத்திலும் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு சுமார் 5 கிமீ தொலைவில் வெள்ளக்குடி கிராமத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பாரதி மூலங்குடியை சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் (48) என்பவர் தனக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் சம்பாநெல் சாகுபடி செய்திருந்தார். கடந்த மாதம் அறுவடை முடிந்த நிலையில், அந்த வயலில் 10 நாட்களுக்கு முன் உளுந்து விதை தெளித்திருந்தார்.

உளுந்து செடிகள் தற்போது வளர துவங்கி இருந்தது. பன்னீர்செல்வம் நிலத்தில் பூமிக்கடியில் பதிக்கப்பட்டிருந்த எண்ணெய்க் குழாயில் நேற்று அதிகாலை திடீர் வெடிப்பு ஏற்பட்டு கச்சாஎண்ணெய் கசிந்து ஒரு ஏக்கர் நிலம் முழுவதும் பரவியது.

விவசாயி பன்னீர்செல்வம் உடனடியாக கூத்தாநல்லூர் காவல்நிலையத்திற்கும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் தகவல் கொடுத்தார். அதன்பேரில் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் மகேஷ், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், ஓஎன்ஜிசி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் ஓஎன்ஜிசி அதிகாரிகள் பன்னீர்செல்வத்திடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உரிய இழப்பீடு பெற்று தருவதாக உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து வயலில் பரவியுள்ள கச்சாஎண்ணெய் அப்புறப்படுத்தும் பணியில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் வரதராஜன் கூறுகையில், ‘இதுபோன்ற பாதிப்பை மறைக்கத்தான் சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை, கருத்துகேட்பு கூட்டம் தேவையில்லை என மத்திய அரசு கூறுகிறது. எனவே, விளைநிலத்தில் குழாய் பதிப்பதை தடை செய்ய வேண்டும்.

எண்ணெய்க்கசிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். எண்ணெய் எரிவாயு எடுப்பதை நிறுத்திவிட்டு காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்’ என்றார்.

Related Articles

Back to top button