தேசதுரோக வழக்கில் பள்ளி : மாணவர்களை படிக்க விடாமல் விசாரணை நடத்தும் காவல்துறை
பெங்களுரை அடுத்து பிதார் என்ற பகுதியிலுள்ள ஷாஹின் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் விதத்தில் நாடகம் ஒன்றை 4ஆம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு மாணவர்களால் அறங்கேற்றப்பட்டுள்ளது.
இதனால் ஷாகீன் பள்ளி நிர்வாகம் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், உருது ஆசிரியையான பரீதா பேகம் மற்றும் நாடக உரையாடலை எழுதிய 6ஆம் வகுப்பு குழந்தையின் தாயார் நஜ்புன்னிஷா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக, பள்ளி குழந்தைகளிடம் போலிஸார் அடிக்கடி விசாரணை நடத்தி தொல்லை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 9 நாட்களில் 5 முறை போலிஸார் பள்ளிக்கு சென்று நாடகத்தில் நடித்த குழந்தைகள் உட்பட 85 குழந்தைகளிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
போலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அரசின் நடவடிக்கையை முடித்துக்கொண்டு அனைத்து வழக்கையும் திரும்ப பெறவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்