CAA & NRCஇந்தியா

3வது முறையாக துப்பாக்கிச்சூடு, ஜாமியா வளாகத்தில் நள்ளிரவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு, மாணவர்கள் விடிய, விடிய ஆர்ப்பாட்டம்

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதை அடுத்து, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, மாணவர்கள் விடிய விடிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமைத் திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு விதமான போராட்டங்களை டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் நடத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி 30-ம் தேதி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் ராஜ்கோட் நோக்கி பேரணி சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த பயங்கரவாதி ஒருவர், மாணவர்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டார்.

இதில், மாணவர் ஒருவர் குண்டுபாய்ந்து காயமடைந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே, துப்பாக்கிச் சூட்டை கண்டித்து மாணவர்களும் போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் ஜாமியா பல்கலைக்கழகத்தின் 5வது கேட் அருகே இருசக்கர வாகனத்தில் மர்ம தீவிரவாதிகள் 2 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், அங்கு திரண்ட மாணவ, மாணவிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். பின்னர் ஜாமியா நகர் காவல்நிலையத்திற்கு சென்ற மாணவர்கள், அங்கும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படும் இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர், அங்குள்ள சிசிடிவிகளில் மர்ம பயங்கரவாதிகள் உருவம் பதிவாகியுள்ளதா என்பதை சோதனை செய்த போலீசார், மாணவர்களின் புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருப்பினும், துப்பாக்கிச் சூட்டை கண்டித்து மாணவ, மாணவிகள் விடிய விடிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Articles

Back to top button